ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு : இறப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்வு
மேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.
அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டும் சுமார் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் கொலோனுக்கு தெற்கே உள்ள அஹ்ர்வீலர் மாவட்டத்தில் சுமார் 98 பேர் அடங்குவதாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக நீர் நிலைகள் காரணமாக பல பகுதிகளில் தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை குறைந்தது 45 பேர் உயிரிழந்த வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள எர்ஃப்ட்ஸ்டாட் என்ற இடத்திற்கு ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் விஜயம் செய்தார்.
பகிரவும்...