Main Menu

சோலேமானீ கொல்லப் பட்டதற்கு பழிவாங்கப் படுவது நிச்சயம்: ட்ரம்பை குறிவைக்கும் ஈரான்!

ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படுவது நிச்சயம் என ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனேயி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அலி காமனேயியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், ஒரு பெரிய போர் விமானம் அல்லது டிரோனின் நிழலில், ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற ஒரு படம் பகிரப்பட்டிருக்கிறது.

‘பழிவாங்கப்படுவது நிச்சயம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை முதலில் ட்விட் செய்த மற்றொரு ட்விட்டர் கணக்கை, ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

அந்த டுவீட்டில், ஃபர்ஸி மொழியில் பழிவாங்கல் எனும் சொல் சிவப்பு நிறத்தில் இருந்தது. சோலேமானீ கொன்றவர். இவர் தான் சோலேமானீயை தாக்க உத்தரவிட்டார். ட்ரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’ என அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

அயதுல்லா காமனேயியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், ‘எப்போது வேண்டுமானாலும் பழிவாங்கப்படும்’ என்று கடந்த டிசம்பர் 16ஆம் திகதி காமனேயி கூறியிருந்த கருத்துடன் இந்தப் படம் பகிரப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் படி, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையாக இவர்கள் குறிவைக்கப்பட்டதாக பின்னர் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் காஸ்ஸெம் சோலேமானீ கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

பகிரவும்...