சீனாவில் திருமணக் குறும்புச் சடங்குகளுக்குத் தடைவிதிக்கத் திட்டம்
குறும்பு எனும் பெயரில் திருமண மாப்பிள்ளைகளை வன்முறையான சடங்குகளுக்கு உட்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீன மாவட்டம் ஒன்று அறிவித்துள்ளது.
சீனாவின் ஷாண்டோங் மாநிலத்தின் ஷென் மாவட்டத்தில் அத்தகைய வன்முறைச் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.
மாப்பிள்ளைகளை மரங்களில் அல்லது தொலைபேசிக் கம்பங்களில் கட்டுதல், அவர்களின் மீது முட்டையை வீசுதல் அல்லது மதுபானத்தை ஊற்றுதல் போன்ற பழக்கங்கள் அங்கு நடைமுறையில் உள்ளன.
திருமணச் சடங்குகளில் குதூகலம் அதிகரிக்க, உறவினர்கள் மணமக்களை மட்டுமல்லாமல் மணமக்களின் பெற்றோரையும் குறும்புமிக்க செயல்களுக்கு உட்படுத்துகின்றனர்.
அத்தகைய சடங்குகள் மணமக்களிடமிருந்து தீயசக்தியை விலக்கும் என்பது பழங்கால நம்பிக்கை.
அவற்றுக்கு அண்மைக்காலமாகக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
வன்முறையான சடங்குகளால் மக்களுக்குக் காயங்கள் மட்டுமல்லாமல் மரணம் கூட நேர்வதால் அரசாங்கம் அச்சடங்குகள் முறையற்றவை எனக் கருதுகிறது.
அவற்றை ஒடுக்கப்போவதாக அறிவித்துள்ள ஷென் மாவட்ட அதிகாரிகள், குறும்புச் செயல்களைச் செய்பவர்கள் பொது ஒழுங்கைச் சீர்குலைத்த குற்றத்துக்குத் தண்டிக்கப்படுவர் என்று கூறினர்.