சிகாகோவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை
சிகாகோவில் கடந்த 2012ம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வாலிபர், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத்(25). இவர் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அப்பகுதியில் இருக்கும் பார் ஒன்றின் அருகில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இந்த தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தாவூத்தை தேடி வந்த தனிப்பிரிவுப்படை போலீசார், சில மாதங்களில் அவரை கண்டறிந்தனர். பின்னர் தாவூத், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாவூத் சிறையில் இருக்கும்போது, போலீசார் அவர் வசித்த இடத்தில் விசாரிக்கையில், மேலும் 2 கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தாவூத் மீது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பான வழக்குப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், தாவூத்துக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.