சாய்ந்தமருது தாக்குதல் : 3 பேர் பலி, 3 பேர் காயம்
கல்முனை – சாய்ந்தமருது – சம்மாந்துறைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் செயற்பட்ட தற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு தொடர்பில் தகவல் கிடைத்தநிலையில் குறித்த வீட்டை இராணுவத்தினர் சோதனையிடச்சென்றபோது அங்கிருந்த குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றது.
இதில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினரில் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒரு பொது மகன் கொல்லப்பட்டதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த வீட்டை சோதனையிட்டபோது அங்கிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் கொடிகள், பனர்கள் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தும் தற்கொலை குண்டுகள், குண்டு தயாரிக்கப்பயன்படும் வெடிபொருட்கள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்கொலை குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட போது அணிந்திருந்த ஆடை மற்றும் ஐ.எஸ். அமைப்பின் எழுத்து பொறிக்கப்பட்ட திரைச்சீலை என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் ட்ரோன் கருவி ஒன்றும், மடிக்கணினி ஒன்றும் அங்கு மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை ஆகிய பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.