சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில்,
யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.
இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அண்மையில் பாகிஸ்தானுக்கு 30 ஆயிரம் கண்கள் தானம் செய்யப்பட்டது தொடர்பாக வெளியான தகவலையும் வடபகுதி கரையோரங்களில் மிதக்கும் சடலங்கள் தொடர்பாகவும் கேள்வியெழுப்பினர்
போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதன் போது பங்கேற்றார்.
போராட்டநிறைவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.