சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறுவது சரித்திர உண்மையா. அதற்கு முன்பெல்லாம் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் நிறைய உண்டு.
அதற்குள் நாம் போக வேண்டாம். அந்த சம்பவங்கள் கசப்பான, மறைக்கப்பட வேண்டிய மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதை நாம் மீண்டும் பேசினால் மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும்.
அந்த சம்பவங்களுக்குள் ஒரு சாதாரண மனிதனே போகக்கூடாது. அதுவும் ஒரு நடிகர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஸ்வரூபம் படம் வெளிவந்த போது இஸ்லாமியர்களை எப்படி பயங்கரவாதிகளாக சித்தரித்து காண்பித்தார் என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள். சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக கமல் தொடர்ந்து இப்படி பேசி வருகின்றார்.
வேஷ்டி கசங்காமல் வீட்டிற்கு அனுப்புவேன் என்று கமல் கூறுகின்றார். ராஜ தந்திரி என பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி போய்விடும் என்று கூறினர். எடப்பாடி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகின்றது.
கமல் கத்துக்குட்டி. ஒரு கருத்தை கூறிவிட்டால் பெரிய ஆளாகிவிட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம். இவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். எடப்பாடியின் ஏழைகளுக்கான ஆட்சி தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.