சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் சில அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பாக பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியது.
அதற்கமைய, பொது வேட்பாளரின் சங்கு சின்னம் காணப்பட்டது.
இந்தநிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.
இதன்போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக குத்து விளக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கு சகல தரப்பினரின் ஒப்புதலுடன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குச் சங்கு சின்னத்தை வழங்குமாறு கோரி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்தக் கடிதத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.