கொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு
இந்தியா முழுவதும் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று யூன் 7ம்திகதி ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரஅமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இதனையடுத்து, ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது எனவும் குறித்த செய்திக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஸ்யா மற்றும் பிரித்தானியா ஆகியவை மட்டுமே இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 1,20,406 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,19,293 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். இதனால் கொரோனாவிலிருந்து மீளும் விகிதம் 48.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 287 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,929 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 82,968 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து தமிழகத்தில் 30,152, தலைநகர் டெல்லியில் 27,654 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்களில் உச்சத்தைத் தொடும் எனவும் ஆனால், தேசிய அளவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை எனவும்
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலோரியா தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மதவழிபாட்டு தலங்கள் , உணவகங்கள், விடுதிகள், வணிகவளாகங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில், நாளை முதல் புதிய தளர்வுகள் அமுலுக்கு வருவதால் கொரோனா வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.