Main Menu

குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணாண்டோ அபார சதம்: நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில், இலங்கை-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா 12 ரன்னில் அவுட் ஆனார்.

குசால் மெண்டிசுடன் அவிஷ்கா பெர்ணாண்டோ இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா பெர்ணாண்டோ 100 ரன்னில் அவுட்டானார். சமர விகர்மா 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் அசலங்கா அதிரடியாக ஆடி 40 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இலங்கை அணி 49.2 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 324 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு இலங்கை இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது.

இதையடுத்து, டி. எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவரில் 221 ரன்கள் எடுக்கவேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

அடுத்து இறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.

அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 48 ரன்னில் வெளியேறினார். டிம் ராபின்சன் 35 ரன்னும், பிரேஸ்வெல் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், நியூசிலாந்து 27 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

பகிரவும்...
0Shares