கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள் – ரவூப் ஹக்கீம்
ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு வலியுறுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களினைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள், அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தன.
இந்த கலந்துரையாடல்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டத்தைக் கையிலெடுக்கின்ற நாசகாரக் கும்பல்களுக்கு தலைமைதாங்கும் சிலரின் பெயர்கள் குறித்தும், இன்றைய தினம் இடம்பெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘சில இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் வன்முறைகள் நடைபெற்றமைக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தேன்.
அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
கலகக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு சில இடங்களில் போதியளவு படைவீரர்கள் இல்லாமையினால் சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது. அவ்வப்போது நிலைமைகளை கவனத்திற்கொண்டு, இவ்வாறான பிரதேசங்களுக்கு மேலதிக படை வீரர்களை அனுப்பவதற்கு இதன்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாதம் எங்களுக்கு தரப்பட்டது.
ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடைபெறும்போது, அதனை அறியத்தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.