Main Menu

ஐ.நா. பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட உள்ளது…?

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் எவ்வாறானது என்பதை ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் சவால் நிரந்த தருணமாக கருதுகின்றோம்.

சர்வதேச விவகாரங்களில் நாம் கவனமாக பயணிக்க வேண்டியுள்ளது. எமது சர்வதேச கொள்கையானது சர்வதேசதுடன் பிளவுபடாத கொள்கையாகும்.

அதேபோல் எந்த சர்வதேச சக்திக்கும் சாயாது சுயாதீனமான நாடாகவும், எந்தவொரு நாட்டுக்கும் எமது உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாத வகையிலும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.

சகல நாடுகளுடனும் நட்புறவு ரீதியில் பயணிக்க வேண்டுமே தவிர எந்த முகாமையும் சார தயாராக இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...