எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப்பணி நிறைவு- 2 மாதத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்
எவரெஸ்ட் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி நிறைவடைந்த நிலையில், மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டனர். இதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தொடங்கியது. இப்பணியில் நேபாள ராணுவத்துடன், நேபாள மலையேற்ற சங்கம், சுற்றுலாத்துறை, எவரெஸ்ட் மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சில தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.
மலையேறும் வீரர்கள் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள், காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், வாட்டர் பாட்டில்கள், கேன்கள், பேட்டரிகள், உணவு பாக்கெட்டுகளின் கவர்கள் போன்றவை அகற்றப்பட்டன. மலையேற்ற பயிற்சியின்போது காணாமல் போனவர்களின் சடலங்களும் அகற்றப்பட்டன.
கடந்த 2 மாத காலமாக நடந்த இந்த தூய்மைப் பணி நிறைவடைந்தது. எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் மற்றும் 4 மனித உடல்கள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று மட்டும் 5 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த குப்பைகள் அனைத்தும் எவரெஸ்ட் அடிவார முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் காத்மாண்டு நகருக்கு கொண்டு வரப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், எவரெஸ்ட் குப்பைகளில் ஒரு பகுதி, மறு சுழற்சிக்காக தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டும் இதேபோன்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என ராணுவ செய்தித் தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே தெரிவித்துள்ளார்.