எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகின்றது – சுமந்திரன்
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலமையில் இடம்பெற்றது.
குறித்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்க்கண்டவாறு கூறினார்.
தமிழர்களுக்கு சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு அவசியம் என்றும் அதற்காக நாம் முழுமையாக செயற்பட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயமான தீர்வு என சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளும்படி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் செயற்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மாற்று அணியென கூறிக்கொள்பவர்களால் 5 ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமா என கேள்வியெழுப்பிய சுமந்திரன், அவர்கள் தமிழர்களை சின்னபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள் என்றும் குறிப்பிட்டார்.