உலகின் அதிவேக பறவைக்கு சிறப்பு மருத்துவமனை
உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கு அபுதாபியில் முதல் முறையாக தனியாக சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவை ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவை ஆகும். இது மணிக்கு 389 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. வானில் பறக்கும் போதே 2 கிலோ மீட்டருக்குள் இருக்கிற இரையை குறிவைத்து விட்டால் அடுத்த 4 நிமிடங்களில் இரையைப் பிடித்து விடும். பார்வையும் அதீத வேகமும்தான் ராஜாளி பறவையின் பலம்.
இந்த வகை ராஜாளி பறவைகள் அரபுநாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பலர் ராஜாளியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். ராஜாளி பறவைகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ராஜாளி பறவையை அதன் உரிமையாளர்கள் விமானத்தில் எடுத்து செல்ல ஏதுவாக, அந்த பறவைகளுக்கென தனியாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அபுதாபியில் ராஜாளிகளுக்கு என தனியாக சிறப்பு மருத்துவமனை முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவற்றின் அலகு, கால் நகங்களை சுத்தம் செய்தல், தேவையான மருந்து வழங்குதல் போன்ற முதலுதவி சிகிச்சை தொடங்கி அறுவை சிகிச்சை வரை அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.