உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்ததுடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா கடந்த ஜனவரி 11ஆம் திகதி தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
தற்போது நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவடைந்ததை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.