இலஞ்சம் கொடுத்தால் மாத்திரமே வடகொரியாவில் வாழ முடியும் – ஐ.நா.வின் கருத்துக்கு கண்டனம்!
‘வடகொரியாவில் இலஞ்சம் கொடுத்தால் மாத்திரமே வாழ முடியும். அங்கு இலஞ்சம் என்பது பரந்து கிடக்கிறது. அடக்குமுறைகள் நிறைந்துள்ளன’ என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், ஐக்கிய நாடுகளினால் வௌியிடப்பட்ட அறிக்கையை அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை என வடகொரியா விமர்சித்துள்ளது.
அன்றாட வாழ்க்கையையே நகர்த்த சிரமப்படும் மக்களிடமிருந்து வடகொரிய அதிகாரிகள் இலஞ்சமாக பணம் வசூலிப்பதாகவும், அவ்வாறு வழங்காதவர்களுக்கு பொலிஸார், வழக்குகளில் இணைத்துவிடுவதாக அச்சுறுத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அறிக்கையை அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை என வட கொரிய கண்டித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர் ஆணையாளர் மிச்சேல் பேச்லெட் (Michelle Bachelet) கூறுகையில், “பல லட்சம் வடகொரிய மக்களின் மனித உரிமையைக் கூட கவனிக்க முடியாத வகையில் அந்த நாடு அணுவாயுதத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறது” எனக் குற்றம்சுமத்தியுள்ளார்.
வடகொரியாவில் 10-ல் 4 பேருக்கு, அதாவது 10.9 மில்லியன் மக்கள் போதிய உணவு கூட இல்லாமல் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் ஐ.நா. குற்றம் சுமத்தியுள்ளது.
உயர் ஆணையாளர் மிச்சேல் பேச்லெட் மேலும் கூறுகையில், “உணவு, சுகாதாரம், இருப்பிடம், தொழில், நகர்வதற்கான உரிமை, சுதந்திரம் என அத்தனை மனித உரிமைகளும் அனைவருக்கும் உரித்தானது மட்டுமன்றி தடுக்க முடியாதது.
ஆனால், வடகொரியாவைப் பொறுத்த வரையில் தனி ஒரு மனிதனுக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து இணங்கச் செய்தால் மாத்திரமே இந்த உரிமைகள் எல்லாம் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.