இலங்கை விவகாரம்: மிச்செல் பச்லெட் காட்டமாக பிரதிபலிப்பார்- சுமந்திரன்
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இம்முறை காட்டமாக பிரதிபலிப்பார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த தினத்தன்று ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மூலமான அறிக்கையைச் சமர்பிக்கவுள்ளதுடன் இலங்கை விவகாரம் குறித்தும் தனது அவதானிப்புகளை வெளிப்படுத்தவுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு சர்வதேச தரப்பினர் மற்றும் நாமும் கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் இலங்கை அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், தங்களது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்கள் திரட்டல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி காட்டமான பிரதிபலிப்பை நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கின்றது என எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.