இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், 2019-20 கல்வியாண்டுக்கு புலமைப் பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி துறைகளில் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் கலாநிதி கற்கை நெறிகளுக்கு இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தப் புலமைப் பரிசில்களுக்காக இலங்கையின் திறமையான மாணவர்களை இலங்கை அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சுடனான கலந்தாலோசணையுடன் இந்திய அரசாங்கம் தெரிவு செய்யவுள்ளது.
புலமைப் பரிசில்கள், கற்கை நெறியின் முழுமையான காலப் பகுதிக்குமான போதனைக் கட்டணம் மற்றும் ஒரு மாதாந்த கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
அத்துடன், தங்குமிடக் கொடுப்பனவு மற்றும் ஒரு வருடாந்தக் கொடுப்பனவு என்பவற்றையும் கூட இந்தப் புலமைப் பரிசில் உள்ளடக்குகின்றது.
இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் நகரத் திட்டமிடல், நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணையதளத்திலிருந்து விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 26 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிராலயம் தெரிவித்துள்ளது.