இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது!
இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 24 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கோர தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. மேலும் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், கடந்த 3 மாதங்களாக தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கொழும்பின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே இன்று காலை போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.