இலங்கை செல்லும் இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின்போது உயிரிழந்தவர்களில் 8 பேர் பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்கள் விஜயம் செய்யும் இடங்கள் உட்பட மேலும் பல இடங்களில் கூடுதல் தாக்குதல்களை தீவிரவாதிகள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் காணப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் ஏற்கனவே தங்கியுள்ள பிரித்தானியர்களை மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களுக்கு செல்வதை மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்குமாறும் இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டத்தை பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது தங்கியுள்ள பிரித்தானியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து பயணத்துறையுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.