இலங்கை காத்தான்குடியில் கடவுச்சீட்டு , விசா இல்லாத 5 இந்தியர்கள் கைது!
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று செவ்வாய்கிழமை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, இந்தியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர்.
விசா மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போட்) ஆகியவை மேற்படி நபர்களிடம் இருக்கவில்லை என்றும், அதனாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
காத்தான்குடி முஹீதீன் பள்ளிவாசல் கட்டட நிர்மாண வேலைக்காக இவர்கள் வந்திருந்ததாக, கைது செய்யப்பட்டோர் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு போலீஸார் இணைந்து இன்று காத்தான்குடியிலுள்ள வீடுகளிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு போலீஸார் மறுத்து விட்டனர்.
கடந்த 21ஆம் தேதி நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், சங்கரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவருமான சஹ்ரான் ஹாஷிம் என்பவரின் சொந்த ஊர் காத்தான்குடி என்பது குறிப்பிடத்தக்கது.