இலங்கையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்
இலங்கையில் இன்று காலை முதல் ஏழு இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் நடந்த குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.