இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தென் சூடானின் நிலைமை குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்துகொள்ள அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.