இயல்பு நிலைக்கு திரும்பும் அமெரிக்கா
அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முழுவீச்சில் போட்டு வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.
சி.டி.சி.யின் இந்தப் பரிந்துரையை அரசும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேற்று முக கவசம் இல்லாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஜோ பைடன் கூறுகையில், இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு சிறப்பான தினம். ஏராளமான அமெரிக்கர்களுக்கு இவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுவதில் நாம் பெற்ற அசாதாரண வெற்றிகளால் இது சாத்தியமானது’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் மிக மிக குறைவாகவே இருக்கிறது. எனவே முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை. ஆனால் 2 டோசும் போட்டு முடிக்காதவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பகிரவும்...