இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது – மனோ
கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகரசபை உள்ளது.
இந்தநிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இன பிரச்சினையினால், கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள, அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் தரப்பினர் தன்னை சந்தித்து உரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பில், தான் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும் கலந்தாலோசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினையை தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும் எனவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.