Main Menu

இத்தாலி வைத்தியரின் கருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு

கொரோனா வைரஸ் இன்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இத்தாலியில் இனி இல்லை என அந்நாட்டின் வைத்தியர் தெரிவித்த கருத்துக்கு மறுத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொடர்பாக மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்றாக இருக்கிறது. அங்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,33,197 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,475 ஆகவும் உள்ளது.

சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த இத்தாலியில், தற்போதுதான் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தன் நாட்டில் இருக்கும் கொரோனா வைரஸின் நிலை தொடர்பாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ, உண்மையில் கொரோனா வைரஸ் மருத்துவரீதியாக இத்தாலியில் இனி இல்லை என்றும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சோதனை செய்யப்பட்ட வைரஸ் மாதிரியையும் 10 நாட்;களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரியையும் ஒப்பிடும்போது, தற்போது வைரஸின் வீரியம் முற்றிலும் குறைந்துள்ளதைக் காட்டியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவர் ஜாங்க்ரிலோவின் கருத்தை இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியோர், முற்றிலும் மறுத்துள்ளனர்.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால தலைவர் மைக்கேல் ரியான ஊடகஙகளுக்கு தெரிவிக்கையில், ‘நாம் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா இன்னும் கொடூர உயிர்க்கொல்லி வைரஸ்தான்.

திடீரென வைரஸ் தன் இயல்புநிலையை விடுத்து, குறைந்த பாதிப்பு ஏற்படுத்தும் நோய்க்கிருமியாக இருக்க முடிவு செய்துள்ளது என்ற கருத்துகளை உருவாக்காமல் மிகக் கவனமாகச் செயற்;பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பாக தெரிவித்துள்ள இத்தாலியின் தேசிய சுகாதார சபையின் தலைவர் பிராங்கோ லோகடல்லி, ‘ஜாங்க்ரிலோவின் கருத்துகளால் நான் முற்றிலும் குழப்பமடைந்தேன். இத்தாலியில் தினமும் உருவாகும் புதிய கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே வைரஸின் வீரியம் குறைந்துள்ளதா என்பதைக் கணிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...