Main Menu

அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் டொனால்ட் லூ இலங்கை வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இம்மாதம் 10 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இன்றையதினம் காலை இலங்கைக்கு வருகைதந்துள்ளார். 

இவ்விஜயமானது இந்நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

 அதன்படி வெள்ளிக்கிழமை (10)  இந்தியாவை சென்றடைந்திருந்த இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, தென்னிந்தியாவுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சென்னையில் கொன்சியூலர் அதிகாரியுடன் சந்திப்பை முன்னெடுத்திருந்தார். 

இதனையடுத்து இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ள டொனால்ட் லூ, கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைமைகள் பலருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார். இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

 அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்க வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் மீள் உத்தரவாதத்தை வழங்கவுள்ள அவர், சுதந்திரமான ஜனநாயக சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக சிவில் சமூகத்தை வலுவூட்டவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தவுள்ளார். 

பகிரவும்...
0Shares