அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுக்க தயாரில்லை – சஜித்
நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாம் இந்த நாட்டுக்கான அழிவின் பாதையாகவே நாம் பார்க்கிறோம்.
துறைமுக நகரத்திட்டமானது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலமானது தேசத் துரோகத்தின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றது.
இன்று கொரோனா பெருந்தொற்று நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கருத்திற்கொள்ளாமல்தான் நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது.
இது சரியானதா என்பதை நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன். இன்று இந்த விவாதம் நடைபெறுகிறது என்பதால் கொரோனா தொற்று குறையப்போகிறதா? மரணங்களில் எண்ணிக்கை குறைவடையப் போகிறதா? தடுப்பூசிகள் கிடைக்கப் போகின்றதா? வைத்திய வசதிகள் நாட்டுக்கு வரப்போகிறதா? ஒன்றுமில்லை.
வாழ்வாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை. சலுகைகள் தொடர்பாக தீர்வொன்று இல்லை.
இந்த நிலையில்தான், துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக அரசாங்கம் கதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியுமா? – இல்லை.
இது முற்றுமுழுதாக நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒரு சட்டமூலமாகும். இது பெற்றுக் கொண்ட சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் ஆபத்தான ஒன்றாகும்.
அரசமைப்பை இந்த சட்டமூலம் முழுமையாக மீறியும் அரசாங்கம் இதனை நிறைவேற்றவே ஈடுபாடு காட்டிக்கொண்டிருக்கிறது.
இதனால்தான் உயர்நீதிமன்றம் இதனை நிராகரித்துள்ளது. அரசாங்கம் இது தொடர்பாக இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் அரசாங்கம் உள்வாங்க வேண்டும். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்.
அதனைவிடுத்து அவசரப்பட்டு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்த செயற்பாட்டுக்கு உடன்படக்கூடாது.
நாடு அபிவிருத்தி அடைவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். இதற்கான ஒத்துழைப்பை நாம் என்றும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.
எனினும், அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுக்க நாம் தயாரில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.