Main Menu

அதானி ஊழல் விவகாரம்- பாராளுமன்ற வளாகத்தில் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது.

அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை.

அதானி விவகாரத்தை எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிளப்பி வருகிறார்கள். பாராளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் அதானி ஊழல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க் கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர். கோஷங்களையும் எழுப்பினார்கள். அதானி ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். மோடியும், அதானியும் ஒன்று தான் என்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கரை வைத்திருந்தனர். ராகுல் காந்தி கூறும்போது, ‘பிரதமர் மோடி அதானிக்கு எதிராக விசாரைண நடத்த முடியாது. ஏனெனில் அது தனக்கு எதிரான விசாரணைக்கு சமம்’ என்றார்.

வன்முறை நடந்த உ.பி. மாநிலம் சம்பல் பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்தியா கூட்டணியின் இந்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையே சம்பல் பகுதிக்கு ராகுல்காந்தியை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. கே.சி.வேணுகோபால் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தார்.

பகிரவும்...
0Shares