அணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்
உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. உலகளாவிய அளவில் அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான கையேடுகளை இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
அவ்வகையில், இந்த (2019) ஆண்டுக்கான கையேடு இன்று வெளியிடப்பட்டது. இந்த கையேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விபரங்களின்படி சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்ட வகையில் இந்தியாவின் அணுகுண்டுகள் கையிருப்பு கடந்த 2018-ம் ஆண்டில் இருந்த 130-140 என்ற அதே அளவில்தான் இப்போதும் உள்ளது.
ஆனால், பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன என்பது தெரியவந்துள்ளது.
அதேவேளையில், கடந்த ஆண்டு 280 அணுகுண்டுகளை வைத்திருந்த சீனா இந்த ஆண்டில் 290 அணுகுண்டுகளை வைத்துள்ளது. கடந்த ஆண்டு 140-150 அணுகுண்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானின் கையிருப்பும் 160-ஐ இப்போது எட்டியுள்ளது.
இஸ்ரேலிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை 80-ல் இருந்து 90 ஆகவும், கடந்த ஆண்டு 10-20 அணுகுண்டுகளை மட்டுமே வைத்திருந்த வடகொரியாவின் கையிருப்பு தற்போது 30 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகள் ஒட்டுமொத்தமாக 14,465 அணுகுண்டுகளை வைத்திருந்தன.
ஆனால், இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கையில் 600 குறைந்து, மேற்கண்ட நாடுகள் வைத்திருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கை 13,865 ஆக தற்போது உள்ளது. இவற்றில் 3,750 அணு ஆயுதங்கள் படைகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையில் சுமார் 2 ஆயிரம் அணு ஆயுதங்கள் எப்போதும் இயங்கும் நிலையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.