Main Menu

பிரித்தானியாவால் எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை

இலங்கையைச் சேர்ந்த 35 வயதான கிஷாந்த் பெரமல்யா  (Kishanth Peramalya )  , பிரித்தானிய அரசாங்கத்தின் இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆப்பிரிக்க நாடான எஸ்வத்தினிக்குக் (Eswatini ) கட்டாயமாக அனுப்பப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் .

2021ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் பிரிட்டன் கடற்படையால் மீட்கப்பட்ட அவர், சட்டவிரோதமான முறையில் மூன்று ஆண்டுகள் டியாகோ கார்சியா  (Diego Garcia) தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு கடுமையான மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகிப் பலமுறை தற்கொலைக்கு முயன்றதுடன், தாக்குதல், தீவைப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றதால் பிரித்தானியாவுக்குள்  நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர், ஈரான் போர் நடவடிக்கைகளுக்காக டியாகோ கார்சியா (Diego Garcia) தளம் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட நாடுகளின் மறுப்புக்கு மத்தியில் , நாடாளுமன்றத்திற்கோ மக்களுக்கோ அறிவிக்கப்படாத இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாக அவரை எஸ்வத்தினியில் (Eswatini )  நிரந்தரமாகக் குடியமர்த்தப் பிரிட்டன் நடவடிக்கை எடுத்தது.

3 ஆண்டுகள் வரை அவரது தங்குமிடம், மருத்துவச் செலவுகளை ஏற்கவும் பிரிட்டன் இணங்கியிருந்தது. எனினும், தனிமைப்படுத்தப்பட்ட விருந்தினர் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர் மனநலம்  பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஐ.நா. அகதிகள் முகவரகம் கவலை வெளியிட்டுள்ளதுடன், ஆப்பிரிக்காவை உலக நாடுகளின் பிரச்சினைகளைக் கொட்டும் குப்பைத்தொட்டியாகப் பிரித்தானியா பயன்படுத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் , தமது சகோதரனின் மரணம் குறித்துப் பிரித்தானிய அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்