Main Menu

இலங்கை தொடர்பான 7ஆவது மீளாய்வை IMF நிறைவேற்றுச் சபை டிச. 2 பரிசீலிக்க வுள்ளது!

விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் 7வது மீளாய்வு மற்றும் 4ஆம் உறுப்பு ஆலோசனை (Article IV Consultation) ஆகியவற்றை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை திட்டமிட்டுள்ளது.

 

செயல்திறன் அளவுகோல்களைப் பின்பற்றத் தவறியமைக்கான விலக்குக் கோரிக்கைகள், செயல்திறன் அளவுகோல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் மற்றும் நிதி உறுதிப்பாட்டு மீளாய்வு ஆகியவையும் இந்தப் பரிசீலனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

சர்வதேசக் கடன் வழங்குநருடன் சாத்தியமான தொடர் ஏற்பாடு குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச நாணய நிதிய நிதி உதவித் திட்டம் எதிர்வரும் 2027 மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள பின்னணியிலேயே இந்தப் பரிசீலனை இடம்பெறுகின்றது.

 

இலங்கையுடனான 7 ஆவது மீளாய்வு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியிருந்த சர்வதேச நாணய நிதியம், நிறைவேற்றுச் சபையின் அங்கீகாரத்துக்கு உட்பட்டு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விடுவிப்பதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.