அனர்த்த புனரமைப்பு, கிராமிய வீதிகள் திட்ட செயற்பாட்டு அலுவலகம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்
அனர்த்த புனரமைப்பு மற்றும் கிராமிய வீதிகள் திட்ட செயற்பாட்டு அலுவலகத்தின் சேவைகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கடந்த ‘டிட்வா’ (Ditwah) அனர்த்த நிலைமை காரணமாகச் சேதமடைந்த நாட்டின் நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைப்பதற்கும், அவசர அனர்த்தப் புனரமைப்புப் பணிகள் மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் இந்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
‘டிட்வா’ அனர்த்தத்திற்குப் பின்னரான புனரமைப்புத் திட்டத்தைத் துரிதமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கும், ஏனைய கிராமிய அபிவிருத்தி மற்றும் அனர்த்தப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த விசேட திட்ட முகாமைத்துவ அலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள ‘மகநெகும மஹமெதுர’ அலுவலக வளாகத்தின் 9 ஆவது மாடியில் இந்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
‘டிட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களுக்கான நிரந்தரப் புனரமைப்புப் பணிகள், நிறுவன ரீதியான ஒருங்கிணைந்த திட்டத்திற்கு அமைய இந்த விசேட திட்ட அலகின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்படும் இந்த அனர்த்தப் புனரமைப்பு மற்றும் கிராமிய வீதிகள் திட்ட முகாமைத்துவ அலகின் கீழ் நான்கு திட்டச் செயற்படுத்தல் அலகுகள் (PIU) நிறுவப்பட்டுள்ளன.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் (PIU)
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் (PIU)
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் (PIU)
மத்திய மாகாணம் (PIU)
இந்த நான்கு திட்டச் செயற்படுத்தல் அலகுகளின் பணிகளும் விசேட திட்ட முகாமைத்துவ அலகுடன் (PMU) ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும்.
இந்தப் புதிய செயற்பாட்டு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் அனைத்துத் திட்டங்களும் செயற்படுத்தப்படவுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டிற்குள் ‘டிட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 285 உட்கட்டமைப்புப் புனரமைப்புத் திட்டங்களையும், 756 கிராமிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘டிட்வா’ அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களைப் புனரமைப்பதற்கும் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் 168 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
