Main Menu

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை காரணமாக, அக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா என்பது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2026 நவம்பர் 13ஆம் திகதியன்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் 2025ஆம் ஆண்டு முதல் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, செயலாளர் பதவி தொடர்பில் சர்ச்சைக்குரிய கட்சியாக அக்கட்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், சர்ச்சையில் தொடர்புடைய இரு தரப்பினரும் கடந்த நவம்பர் 6ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டின் அடிப்படையில், கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினை குறித்து மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதே பொருத்தமானது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தவறான பிரசாரங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

May be an image of ticket stub and text