Main Menu

“நக்சல் அச்சத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது” – பிரதமர் மோடி

“நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் நக்சல்கள் குறித்த அச்சத்தில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடியபோது பேசிய பிரதமர் மோடி, “2004 முதல் 2013 வரையிலான புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளை விட, வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததைக் காணலாம்.

துரதிர்ஷ்டவசமாக, அக்கால அரசாங்கங்கள் நக்சலிசத்தை ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்று கருதி, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, நாட்டின் எதிரிகளை உறுதியான மனத்துடனும், திட்டமிட்ட வியூகத்துடனும் எதிர்கொண்டு தோற்கடிக்க வேண்டும். இதற்கான அரசியல் உறுதிப்பாடு, 2014-ல் வலுப்படுத்தப்பட்டது. பாரத அன்னைக்கு சேவை செய்யும் வாய்ப்பை நீங்கள் இந்த முதன்மைச் சேவகனுக்கு வழங்கினீர்கள். 2014-க்குப் பிறகு நிலைமை எவ்வாறு மாறத் தொடங்கியது என்பதை நாம் அனைவரும் கண்டோம்.

ஒரு காலத்தில் சுமார் 20 மாநிலங்களில் உள்ள 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் ஆயிரக்கணக்கான கிராமங்களும் லட்சக்கணக்கான மக்களும் துன்பத்திற்கு ஆளாகினர். இந்த நக்சலைட்டுகள் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நிலைக்குச் சென்றனர்.

ஒரே ஆண்டில் 2,000-க்கும் மேற்பட்ட நக்சல் தாக்குதல்கள் நடந்தன. 2010-ஆம் ஆண்டில், அருகிலுள்ள தண்டேவாடாவில் நக்சலைட்டுகளுடனான மோதலின் போது, ​​நமது சிஆர்பிஎஃப் வீரர்கள் 76 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே ஆண்டில் தண்டேவாடாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அப்பாவி பொதுமக்கள் 44 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலம் நமது வீரர்களின் ரத்தத்தால் நனைந்திருந்தது. ஆனால், அரண்மனைகளில் வாழ்ந்த அந்த செல்வாக்கு மிக்க தலைவர்களிடமிருந்து துயரமான குரல் கூட வெளிவரவில்லை; அவர்கள் ஒரு துளி கண்ணீரும் சிந்தவில்லை. இத்தகைய தாக்குதல்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு இடத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. இந்த காலகட்டத்தில், சத்தீஸ்கரில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.

மாவோயிசம் மற்றும் நக்சலிசத்திற்கு எதிரான போராட்டம் சவாலானது. எதிரிகளின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படாமல், இத்தகைய சூழலை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரிகளை எதிர்கொள்ளும்போது, ​​‘எல்லாம் இப்படித்தான் நடக்கும்’ என்று அமைதியாக ஏற்றுக்கொண்டு செயல்படும் எந்தவொரு நாடும் நீடிக்க முடியாது.

47 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நடந்துள்ளது: கடந்த ஓராண்டில் பணியின் போது சிஆர்பிஎஃப் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இது நாட்டின் சரியான கொள்கைகள் மற்றும் உறுதியான மனவுறுதியின் வெற்றி. இது உங்கள் வீரம், துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் வெற்றி

உறுதியான சேவையின் மூலம், நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். இதன் விளைவாக, நக்ஸலிசத்தால் பாதிக்கப்பட்ட மக்களே இப்போது அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் உறுதுணையாக நிற்கின்றனர்

நக்சலிசம் மற்றும் மாவோயிச பயங்கரவாதத்திற்கு எதிராக நாடு பல பத்தாண்டுகளாக நடத்திய போராட்டத்திற்குப் பிந்தைய முதல் தீபாவளி இது என்பதால், 2026-ஆம் ஆண்டின் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் நக்சலிசத்திலிருந்து விடுபட்ட நிலையில் கொண்டாடப்படும் முதல் தீபாவளி இது. கோடிக்கணக்கான நமது மக்கள் நக்சலிச பயத்திலிருந்து முழுமையாக விடுபட்டுள்ள தருணத்தில் வரும் முதல் தீபாவளி இது” என்றார்.