இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாள் – அமைச்சர்கள் மரியாதை
தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக அரசின் சார்பில், தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் இன்று (8.11.2026) சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தாம் சமயப் பணி புரிந்த இடங்களிலேயே பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார். தம் தாய்மொழி அல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும், செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்ந்தார்.
மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். தொன்னூல் விளக்கம் குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும், செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே ஆகும்.
இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவர் 1747-ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே இயற்கை எய்தினார். இந்நிகழ்ச்சியில், “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
