33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
தெரிவுசெய்யப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய, அரச நிறுவன மறுசீரமைப்புக்கான விசேட பிரிவு ஒன்று இந்த ஆண்டு மார்ச் மாதம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, தெரிவுசெய்யப்பட்ட 33 அரச நிறுவனங்களையும் கலைப்பதற்கான நடவடிக்கைகளை குறித்த பிரிவு மேற்பார்வை செய்து வருகின்றது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, தெரிவுசெய்யப்பட்ட அரச நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகள் தொடர்பான நீண்டகால நிலுவைகளைத் தீர்ப்பதற்கும் திறைசேரி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிலுவைகளைத் தீர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிவரை 2.8 பில்லியன் ரூபாய் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரச நிறுவனங்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகள் மற்றும் கொள்வனவு உத்தரவுகள் இரத்துச் செய்யப்பட்டமை உள்ளிட்ட சவால்களை அரச நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளன.
எனினும், இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 51 பிரதான அரச நிறுவனங்கள் இணைந்து 259.3 பில்லியன் ரூபாய் இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் குறித்த நிறுவனங்கள் 227.8 பில்லியன் ரூபாய் இலாபத்தைப் பதிவு செய்திருந்தன.
இதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 51 பிரதான அரச நிறுவனங்களின் ஒட்டுமொத்த இலாபம் 31.5 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
