Main Menu

பாம்பின் இரத்தத்தைக் குடிக்கும் மனிதர்கள்! – அஞ்ச வைக்கும் விசித்திர கலாச்சாரம்

‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்று கூறுவார்கள். அதற்கு காரணம் எவ்வளவு பெரிய வீரனையும் ஒரு துளி பாம்பின் விஷம் வீழ்த்திவிடும். அதனால்தான் பாம்பு பூமியின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பாம்பின் விஷம் ஆபத்தானதாக இருக்கும் போது சில நாடுகளில் மக்கள் பாம்பின் இரத்தத்தை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

எந்தெந்த நாடுகளில் மக்கள் பாம்பு இரத்தத்தை குடிக்கிறார்கள்?

சீனா, வியட்நாம் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் மக்கள் பாம்பின் இறைச்சி மற்றும் இரத்தத்தால் தயாரிக்கப்பட்ட பானங்களை மக்கள் அருந்துகின்றனர்.

உள்ளூர் மக்கள் பெரும்பாலும் பாம்பின் இரத்தத்தை அரிசி வைனுடன் கலந்து ‘பாம்பு மது’ தயாரிக்கிறார்கள். இந்த பாரம்பரிய பானங்கள் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் நுகரப்படுகிறது.

பாம்பின் இரத்தத்தைக் குடிப்பது ஆற்றலை அதிகரிப்பதாகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கூற்றுகளுக்கு வலுவான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு பானம் பல நூற்றாண்டுகளாக குடிக்கப்படுவதாலேயே மட்டும் அது ஆரோக்கியமாக மாறிவிடாது.

பாம்பு விஷம் எப்படி மனிதர்களை பாதிக்கிறது?

பாம்பின் இரத்ததிற்கும், அதன் விஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. பாம்பு தனது விஷச் சுரப்பிகளில் விஷத்தை உற்பத்தி செய்கிறது. ஒருவரை கடிக்கும் போது, ​​தனது பற்கள் வழியாக விஷத்தை அது உள்செலுத்துகிறது.

இந்த விஷம் மனித இரத்தத்திலோ அல்லது திசுக்களிலோ கலக்கும்போது மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. ஆனால், பாம்பின் இரத்தத்தைக் குடிப்பதால் எப்போதும் விஷத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை.

பாம்பு இரத்தம் கலந்த பானத்தை குடிப்பது ஆரோக்கியமானதா?

பாம்பு இரத்தம் ஒருவருக்குச் சிறப்பான ஆற்றலைத் தருகிறது அல்லது நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பாம்பின் இரத்தத்தை எடுக்கும்போதும், சேமித்து வைக்கும்போதும், அதைக் குடிக்கும்போதும் கிருமித் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பாம்பின் விஷம் கலந்த திரவத்தைக் குடிப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

குறிப்பாக உங்கள் வாயின் உட்பகுதியில் ஏதேனும் காயங்கள் இருந்தால், இந்த ஆபத்து இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.