ட்ரம்ப்புடன் பேச்சு வார்த்தை; மட்டுப் படுத்தப்பட்ட முன்னேற்றமே – கனடா
ஒட்டாவா – அமெரிக்காவுடனான அண்மைய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு தீவிரமடைந்துள்ளதாகக் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகள், அடுத்த வாரம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னர் வர்த்தக உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அறிந்துள்ள, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்க அனுமதியற்ற கனேடிய அரசாங்க அதிகாரி ஒருவர், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், “மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கனேடிய அரசாங்கம் உத்தியோகபூர்வ வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இறுதி நேரத்தில் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கனேடியப் பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலடியாக, கனேடியப் பொருட்கள் மீது பல பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதி வரிகளை அமெரிக்கா விதித்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கப் பொருட்கள் மீதும் கனடா பதிலடி இறக்குமதி வரிகளை விதித்தது.
இந்நிலையில், கனடா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இறக்குமதி வரிகளில் சிலவற்றை இம்மாத இறுதியில் நீக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
அதேவேளை, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் உள்ளிட்ட மேலும் பல டசின் பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை விதிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
