Main Menu

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் உடல்நிலை தொடர்பான மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சம்பத் இந்திக குமார, குறித்த மருத்துவ அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை இன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 14 விசேட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.

கடந்த 13ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஷிரந்தி ராஜபக்‌ஷவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டிருந்தார்.

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான இந்த வழக்கில், ஷிரந்தி ராஜபக்‌ஷவின் உடல்நிலை குறித்த மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.