மருமகன் தாக்கியதில் 82 வயது முதியவர் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது
நிட்டம்புவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட தங்கொல்லவத்த, சுஹத மாவத்தையில் தனது வீட்டின் முன்பாக மருமகனால் தடிக்கட்டையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 82 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்ததன் காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த உயிரிழந்தவரின் 22 வயதுடைய மருமகன், குருநாகல் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
