இலங்கை சுங்கத்தின் அதிரடி உத்தரவு – எதிர்வரும் 19 முதல் இறக்குமதியாளர்-களுக்குப் புதிய கட்டுப்பாடு
சுங்க நடவடிக்கைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இறக்குமதி ஆவணங்களைக் கைமுறையாக சமர்ப்பிக்கும் நடைமுறை முற்றாக நிறுத்தப்படுவதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, அனைத்து இறக்குமதியாளர்களும் அன்றைய தினத்திற்குள் கட்டாயமாகத் தங்களது டிஜிட்டல் கையொப்பத்தை பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, முழுமையான கொள்கலன் சுமை இறக்குமதிகளுக்கான காகிதமற்ற சுங்கப் பிரகடனங்களை தயாரிக்கும் புதிய முறைமை ‘CBHQ1’ அலுவலகக் குறியீட்டின் கீழ் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுங்கச் செயன்முறைகளை வணிகர்களுக்கு இலகுபடுத்தவும், தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து வர்த்தக நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிஜிட்டல் கையொப்பத்தைப் பதிவுசெய்துள்ள இறக்குமதியாளர்கள், குறிப்பிட்ட திகதிக்கு முன்பாக எந்தக் காரணம் கொண்டும் தங்களது ஆவணங்களைக் கைமுறையாகச் சமர்ப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் டிஜிட்டல் கையொப்பத்தைப் பெற்றுள்ள போதிலும், கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் பதிவுசெய்ய வேண்டியுள்ளது.
இந்தப் புதிய தொழில்நுட்ப முறைமையின் மூலம் வர்த்தக நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும், அதிக திறனுடனும் நடைபெறும் என இலங்கை சுங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
