நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் புதி கண்டகி (Budhi Gandaki) நதிப் படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ள நீர் ஆறு பாலங்களை அடித்துச் சென்றதுடன், பல குடியிருப்புகளைச் சேதப்படுத்தியது.
இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிகாலை சுமார் 4 மணியளவில் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் வெள்ளம் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் அதிகாரிகள் அதனைக் கண்காணித்து வருகின்றனர்.
அதேவேளையில், தேடுதல், மீட்பு மற்றும் வெளியேற்றும் பணிகளுக்காகப் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு தொடங்கியதிலிருந்து 10 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்டத்தின் உதவித் தலைமை அதிகாரி நேத்ரா பிரசாத் சர்மா ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவுகரமான ‘போட் கோஷி’ (Bhote Koshi) ஆற்று வெள்ளத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) தகவலின்படி, ரசுவா மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,455 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 5,285 பேர் காணாமல் போயுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், கோர்கா (Gorkha) பகுதி அதிகாரிகள் ‘புதி கண்டகி’ஆற்றின் நீர்மட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன் அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
