ரியாத் விமான நிலையம் மீது ஹவுத்திகள் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!
ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த கோடையில் சவுதி அரேபியாவிற்கு எதிராகத் தொடங்கிய தாக்குதலைத் தீவிரப்படுத்திய நிலையில், சனிக்கிழமையன்று (10) ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுத்திகள் இந்த வாரத்தில் நடத்திய மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
உயிரிழந்தவர்களில் நான்கு சவுதி அரேபியர்கள், பங்களாதேஷைச் சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர் என்று சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் அண்மைய கணக்கெடுப்பின்படி, 309 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அம்பியூலன்ஸ் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததாக இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருந்தது.
சவுதி அரேபியாவின் அச்சுறுத்தல் எச்சரிக்கை அமைப்பால் எந்தவித முன்னறிவிப்பும் விடுக்கப்படாத நிலையில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டில் நிகழ்ந்த தாக்குதல்களிலேயே மிகவும் மோசமானதாக அமைந்த இத்தாக்குதல் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இவ்வாரத்தில் முன்னதாக நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், விமான நிலையத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சவுதி வணிக விமானம் ஒன்றும் பலத்த சேதமடைந்தது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி குழுவிற்கு எதிராக யேமன் அரசாங்கம் மேற்கொள்ளும் தரைவழிப் போருக்கு ஆதரவாக, அக்குழுவின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்தத் தீவிரத் தாக்குதல்கள் அந்த இராஜ்யத்தின் தற்காப்புத் திறனில் உள்ள பலவீனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன.
சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியதாக சவுதி அரேபியாவும் யேமன் அரசாங்கமும் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹவுத்திகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, சனிக்கிழமையன்று ரியாத் நகருக்கு வரவிருந்த அனைத்து விமானங்களும் மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும், சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகருக்குச் சேவையளிக்கும் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
