Main Menu

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான மேமுறையீட்டு மனுவைத் தயாரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேல்முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஒக்டோபர் 17 என்றும், சவுதி சட்ட நிறுவனம் ஒன்றுடன் கலந்தாலோசித்த பின்னர் சட்டக் குழு அதனை நிறைவு செய்து தாக்கல் செய்யும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மேல்முறையீடு தொடர்பான பணிகளில் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சட்ட நிபுணர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அதேவேளையில், அனோஜனுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சகம், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

நீதித்துறை நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனோஜனுக்கு மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு கோரும் இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தாங்கள் எந்தவொரு தலையீட்டையும் ஆதரிக்கப்போவதில்லை என்றும், கருணை கோரும் வகையிலான தூதரக ரீதியிலான தலையீடுகள் அனைத்தும் நீதித்துறை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சவுதி அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளின்போது தெரிவித்தனர்.

இதற்கிடையில், சிறையில் அனோஜன் அண்மையில் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரிப்பதற்காக, இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஒக்டோபர் 6 அன்று சிறைக்குச் சென்று, சிறை அதிகாரி மற்றும் சிறை மருத்துவர் ஆகியோரைச் சந்தித்தனர்.

சவுதி சிறை அதிகாரிகள் தூதரகத்திற்கு வழங்கிய தகவலின்படி, அனோஜனுக்கும் அவருடன் ஒரே அறையைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு கைதிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியது.

இதனால், அனோஜனின் முகத்தில் நகக்கீறல்களும் நகங்களால் ஏற்பட்ட காயங்களும் இருந்ததாகவும், கத்தி, கூர்மையான கருவி அல்லது வேறு எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறை அதிகாரிகளும் மருத்துவரும் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சவுதிக்கான பயணத்தின்போது இலங்கைத் தூதரக அதிகாரிகள் அனோஜனை நேரில் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை, அவரது காயங்கள் குறித்த தகவல்கள் சவுதி அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

அனோஜனுக்கு உயிருக்கு தற்போது எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை, அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்,  அனோஜன் வேறொரு சிறையறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

அனோஜனின் குடும்பத்தினர் அவர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வித்த ஹேரத், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார்.

அத்துடன், அவருக்காகச் சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ​​சவூதி அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் தகவல்களையே இலங்கை நம்பியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனோஜனுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்காக, சவுதி அரேபியாவின் சட்ட மற்றும் நீதித்துறை கட்டமைப்பிற்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.