Main Menu

பேருந்து முன்னுரிமைப் பாதை மீண்டும் நடைமுறை

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்துகளுக்கான முன்னுரிமைப் பாதை (bus priority lane) விதிமுறை இன்று (29) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த விதிமுறை காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் அமுலில் இருக்கும்.

இத்திட்டம் இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜயரத்ன, இத்திட்டத்திற்குத் தமது சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று கூறினார்.

பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, பேருந்து முன்னுரிமைப் பாதை விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, கொழும்பு நகரம் முழுவதும் ‘மெட்ரோ’ (Metro) பேருந்து சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், இன்று முதல் மேலும் ஐந்து வழித்தடங்களில் இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட இச்சேவையின் கீழ் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனத்தின் தலைவர் யு.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.