Main Menu

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்

மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுப் பகுதிக்கு அப்பால் புதன்கிழமை (09) இரவு பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை வியாழக்கிழமை (10) தெரிவித்தது.

பலவானின் கோரோன் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) என்ற படகில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவில் 43 பேர் மீட்கப்பட்டதாகக் கடலோரக் காவல் படை கூறியது.

 

கப்பலின் பயணப் பட்டியலில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக, கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80-க்கும் மேற்பட்டோரின் நிலை குறித்த தகவல் தெரியவில்லை என்றும், மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் படகு மணிலாவில் உள்ள பாசெக்கோவிலிருந்து புறப்பட்டு கோரோன் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.