Main Menu

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி (Bhiwandi) பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் பகுதி நேற்றிரவு (30) இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் மேலும் ஏழு முதல் எட்டு பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் இன்று (31) காலை தெரிவித்தனர்.

முன்னதாக பிவண்டி நிஜாம்பூர் நகர மாநகராட்சியால் அபாயகரமானது என அறிவிக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடம், பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்த தொழிலாளர்கள், குறித்த கட்டிடம் இடிந்து விழுந்தபோது அதற்குள்ளேயே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிவண்டி தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் (NDRF) சேர்ந்த மீட்புக் குழுவினர், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தித் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.