சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில், சாம்பியன்ஸ் லீக் (Champions League) கால்பந்து இறுதிப் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெங்கேரியில் (Hungary) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின் பலம் வாய்ந்த ஆர்செனல் (Arsenal) அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்தே ரசிகர்களிடையே இந்த மோதல் வெடித்துள்ளது.
இறுதிப் போட்டியின் முழு நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
இதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனால்டி சூட்-அவுட் வாய்ப்பில், ஆர்செனல் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பி.எஸ்.ஜி (PSG) அணி அதிரடி வெற்றி பெற்றது.
இந்த வரலாற்று வெற்றியை அடுத்து, பி.எஸ்.ஜி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
பி.எஸ்.ஜி அணியின் இந்த மகுடாபிஷேகத்தைக் கொண்டாடுவதற்குப் பாரிஸ் நகர வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். எனினும், இந்த கொண்டாட்டம் சில மணி நேரங்களிலேயே வன்முறையாக மாறியது.
வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் மீது ரசிகர்கள் கற்கள் மற்றும் பட்டாசுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 7 பொலிஸார் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஆத்திரமடைந்த குழுக்களால் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பல பொது மற்றும் தனியார் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், வர்த்தக நிலையங்களின் கட்டமைப்புகளும் கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இப்போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரும் கூட இரு நாட்டு ரசிகர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையே மோதல்கள் வெடித்திருந்தன.
கடந்த சீசன் கொண்டாட்டங்களின் போது பாரிஸில் உயிரிழப்புகளும் பதிவாகியிருந்த நிலையிலேயே, இம்முறையும் இத்தகைய வன்முறைகள் அரங்கேறியுள்ளமை பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
